கூரியரில் நூதன முறையில் கஞ்சா கடத்தல்


கூரியரில் நூதன முறையில் கஞ்சா கடத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2021 1:17 AM IST (Updated: 27 Oct 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு கூரியரில் நூதன முறையில் கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு கூரியர் பார்சலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று புதுக்கோட்டையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்தில் கூரியரை பெற வந்த திருமயம் அருகே மேல்நிலைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 21), விஜி (20) ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.
 மேலும் அந்த பார்சலை சோதனையிட்டதில் கஞ்சா விதையை எண்ணெய்யாக மாற்றி சிறிய பாட்டிலில் அனுப்பப்பட்டது தெரியவந்தது. ஆனால் அந்த பார்சலை தங்களுக்கு தெரிந்த நபரான முருகேசன் (22) வாங்க கூறியதாகவும், தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், அவர் கோவையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து கோவை சென்ற போலீசார் முருகேசனையும் பிடித்து புதுக்கோட்டை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
அதனைத்தொடர்ந்து கூரியரில் கஞ்சா கடத்தியது தொடர்பாக மணிகண்டன், விஜி, முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 620 கிராம் எடையில் இருந்த கஞ்சா பார்சலையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான 3 பேரையும் புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் வருகிற 9-ந் தேதி வரை திருமயம் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் பாதுகாப்பாக வேனில் அழைத்து சென்று திருமயம் சிறையில் அடைத்தனர்.

Next Story