வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
போராட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட துணை அமைப்பாளர் ரேவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநில துணைத் தலைவர் வக்கீல் பாரதிஅண்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் பேசினார்கள்.
வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணையின்படி சமவாய்ப்பு கொள்கையை வெளியிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமல்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஜூலை 7-ந்தேதி வெளியிட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் 2017-ம் ஆண்டு சட்டவிதிகளின் படி 3 மாதத்திற்குள் அமல்படுத்தி 20-க்கும் குறையாத பணியாளர்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்த்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் காது கேளாத, பார்வை இழந்த, பேசும் திறன் இழந்த, உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story