தேவேகவுடா மதசார்பற்ற தலைவர்; குமாரசாமி பா.ஜனதா ஆதரவாளர் - ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. தாக்கு
தேவேகவுடா மதசார்பற்ற தலைவர் என்றும், குமாரசாமி பா.ஜனதா ஆதரவாளர் என்றும் ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. தாக்கி பேசினார்.
ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
துணை முதல்-மந்திரி ஆவது...
குமாரசாமி என்னை நாயுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். அவர் யானையாக இருந்துவிட்டு போகட்டும். யானையாக குமாரசாமியை மாற்றியது நாங்கள் தான். தற்போது என்னையே நாயுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். நான் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்த போது குமாரசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார். 20 மாதம் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், 20 மாதம் பா.ஜனதாவும் ஆட்சி பொறுப்பில் இருக்கலாம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
குமாரசாமி 20 மாதம் முதல்-மந்திரியாக இருந்து விட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி தொடர மறுத்து விட்டார். இதனால் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பின்னணி என்ன? என்ற ரகசியம் எனக்கு தெரியும். எடியூரப்பா முதல்-மந்திரியாகவும், குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா துணை முதல்-மந்திரியாகவும் இருந்திருக்க வேண்டும். ரேவண்ணா துணை முதல்-மந்திரி ஆவது குமாரசாமிக்கு பிடிக்கவில்லை.
ஆடியோ ஆதாரம் இருக்கிறது
தனது சொந்த சகோதரர் ரேவண்ணா துணை முதல்-மந்திரி ஆகி விடக்கூடாது என்பதற்காகவே பா.ஜனதாவுடன் கூட்டணி தொடருவதை குமாரசாமி நிராகரித்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற போது ஒப்பந்தப்படி பா.ஜனதாவுக்கு ஆட்சியை விட்டு கொடுப்போம் என நான் குமாரசாமியிடம் கூறினேன். அவர் மறுத்து விட்டார். இது தொடர்பான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தேவேகவுடா மதசார்பற்ற தலைவர். குமாரசாமி பா.ஜனதா ஆதரவாளர்.
அதனால் பா.ஜனதா வெற்றி பெறுவதற்காகவும், 2 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் சூட்கேஸ் பெட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாயை குமாரசாமி பெற்றுள்ளார்.
இவ்வாறு ஜமீர் அகமதுகான் கூறினார்.
Related Tags :
Next Story