பெங்களூருவில் ரூ.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் - உதவி ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர் சிக்கினர்


பெங்களூருவில் ரூ.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் - உதவி ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Oct 2021 2:53 AM IST (Updated: 27 Oct 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

கலர் ஜெராக்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி உதவி ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

கிடுக்கிப்பிடி விசாரணை

  பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஒரு பையுடன் 3 பேர் சந்தேகம்படும்படியாக சுற்றுவதாக, கோவிந்தபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையை போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தன. இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் முகமதிப்பு உடைய தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து இந்த தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்ததாகவும் கூறி இருந்தனர். இதையடுத்து மகாதேவபுரா போலீசார் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வேணுர்-குந்தடுக்கா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு மேலும் ரூ.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்

  இந்த சந்தர்ப்பத்தில் அந்த பண்ணை வீட்டில் 12 தெர்மகோல் பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த பெட்டிகளை உடைத்து போலீசார் பார்த்தனர். அப்போது அந்த 12 பெட்டிகளிலும் தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தது.

  இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கலர் ஜெராக்சை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தயாரித்து அதை தெர்மகோல் பெட்டிகளில் அடுக்கி வைத்து இருந்ததும், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கலர் ஜெராக்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ.5 கோடி முகமதிப்புடைய 500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி கள்ளநோட்டுகளை போலீசார் பெங்களூருவுக்கு எடுத்து வந்தனர்.

மாநகராட்சி உதவி ஒப்பந்ததாரர்

  போலீசார் விசாரணையில் கைதான 5 பேரும் பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 32), ராஜாஜிநகரை சேர்ந்த ராமகிருஷ்ணா (32), ஒங்கசந்திராவில் வசித்த வரும் தயானந்த் (45), வெங்கடேஷ் (53), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லை சேர்ந்த மஞ்சுநாத் (43) என்பது தெரியவந்தது.

  இவர்களில் வெங்கடேஷ் பெங்களூரு மாநகராட்சியில் உதவி ஒப்பந்ததாராக இருந்து வந்ததும் தெரியவந்து உள்ளது. கைதான 5 பேர் மீதும் கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story