11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணை நிரம்புகிறது
கே.ஆர்.எஸ். அணை 11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் முழுகொள்ளளவை எட்டுகிறது. இதையொட்டி காவிரி தாய், வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பாகினா பூஜை நிறைவேற்றுகிறார்.
மண்டியா:
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணை உள்ளது. இந்த அணை நீர் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு உள்பட காவிரி டெல்டா விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கி வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணை நிரம்பினால் இருமாநில விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இத்தகைய சிறப்பு பெற்ற கே.ஆர்.எஸ். அணை மைசூரு மன்னர் 4-வது கிருஷ்ணராஜ உடையார் தனது மனைவியின் தங்க-வைர ஆபரணங்களை விற்று கட்டியதாக வரலாறு கூறுகிறது. கடந்த 1911-ம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி தொடங்கியது. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தடைகளை தாண்டி அணை கட்டி கடந்த 1932-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணை ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
அணை நிரம்பவில்லை
இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டமும் உள்ளது. கே.ஆர்.எஸ். அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தனது முழு கொள்ளளவை எட்டும். அதாவது ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் அணை நிரம்பி வழியும். ஒரு சில சமயங்களில் செப்டம்பர் மாதங்களிலும் அணை நிரம்பிய வரலாறு உள்ளது.
ஆனால் நடப்பாண்டில் கே.ஆர்.எஸ். அணை செப்டம்பர் மாதம் தாண்டியும் முழுகொள்ளளவை எட்டாமல் இருந்தது. இதனால் 2022-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர்.
வடகிழக்கு பருவமழை
இந்த நிலையில் விவசாயிகளின் கவலையை போக்க கர்நாடகத்தில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை கைக்கொடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வந்தது.
அதன்படி 11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் முழுகொள்ளளவை எட்டும் நிலையில் கே.ஆர்.எஸ். அணை உள்ளது. இதனால் அணையில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.
அணை நிரம்ப ஒரு அடி பாக்கி
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை 123.40 அடியை நேற்று எட்டியது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 341 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 535 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கியுள்ளது.
இதனால் இன்று காலைக்குள் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அணை நிரம்பியதும், நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் எனவும், எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை மறுநாள் பாகினா பூஜை
11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணை நிரம்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு கே.ஆர்.எஸ். அணை அக்டோபர் மாதம் நிரம்பியது. அப்போது முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாகினா பூஜை நிறைவேற்றினார்.
அதுபோல் தற்போதும் கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளவை எட்ட உள்ளது. இதனால் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று பாகினா பூஜை நிறைவேற்ற உள்ளார். அதாவது வருகிற 29-ந்தேதி அவர் கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று காவிரி தாய்க்கும், வருணபகவானுக்கும் நன்றி தெரிவித்து பாகினா பூஜை நிறைவேற்ற உள்ளார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு பசவராஜ்பொம்மை முதல் முறையாக பாகினா பூஜை செய்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
தந்தைக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் தனயனுக்கு கிடைத்தது
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ்பொம்மை கடந்த ஜூலை 28-ந்தேதி பொறுப்பு ஏற்றார். கே.ஆர்.எஸ். அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் முழுகொள்ளளவை எட்டுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் கே.ஆர்.எஸ். அணை நிரம்பவில்லை.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு படி தமிழகத்திற்கு 30 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ) தண்ணீர் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 121 அடியாக இருந்த கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 113 அடியாக சரிந்தது. இதனால் பசவராஜ்பொம்மைக்கு கே.ஆர்.எஸ். அணையில் பாகினா பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்காமல் தள்ளிப்போனது. தற்போது கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், பசவராஜ்பொம்மைக்கு பாகினா பூஜை செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், பசவராஜ்பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை முதல்-மந்திரியாக இருந்த போது கே.ஆர்.எஸ். அணை ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் நிரம்பவில்லை. இதனால் அவர் பாகினா பூஜை செய்ய முடியாமல் போய்விட்டது. அவருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் அவரது மகன் பசவராஜ்பொம்மைக்கு தற்போது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story