சேலத்தில் திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தற்கொலை


சேலத்தில் திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2021 9:38 PM GMT (Updated: 2021-10-27T03:08:14+05:30)

சேலத்தில் திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சூரமங்கலம்:
சேலத்தில் திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
45 நாட்கள்
சேலம் பழைய சூரமங்கலம் அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 26). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகள் சவுந்தர்யா (19)வுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சவுந்தர்யா கர்ப்பமானதாக தெரிகிறது. இதனால் மனைவி சவுந்தர்யா மீது பாலசுப்பிரமணியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பமாகி எத்தனை நாட்கள் ஆகிறது என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என பாலசுப்பிரமணியன், தனது மனைவி சவுந்தர்யாவிடம் கூறி உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று காலை குளியல் அறைக்கு சென்ற சவுந்தர்யா நீண்ட நேரமாகியும் வரவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணியன் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சவுந்தர்யா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சவுந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்தேகம் உள்ளதாக புகார்
இந்த நிலையில் சவுந்தர்யாவின் தந்தை சின்னபையன் போலீசில் அளித்த புகார் மனுவில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் பாலசுப்பிரமணியன், அவரது தந்தை வெங்கடேஸ்வரன், தாயார் தெய்வானை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சவுந்தர்யாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் உடலை வாங்கிச்சென்றனர்.
மேலும் சவுந்தர்யாவுக்கு திருமணம் ஆகி 45 நாட்களே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story