நந்தம்பாக்கத்தில் சாலையை துண்டித்து பள்ளம் தோண்டியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


நந்தம்பாக்கத்தில் சாலையை துண்டித்து பள்ளம் தோண்டியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 6:45 AM GMT (Updated: 27 Oct 2021 6:45 AM GMT)

நந்தம்பாக்கத்தில் சாலையை துண்டித்து பள்ளம் தோண்டியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சமரசம் செய்து வைத்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட கணபதிபுரம் காலனி, துளசிங்கபுரம், உட்கிரவுண்டி காலனி பகுதியில் வசிக்கும் மக்கள், ஐ.டி.பி.எல். காலனி வழியாக நந்தம்பாக்கம்-மவுண்ட் சாலைக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் ஐ.டி.பி.எல். காலனியில் உள்ள சாலையில் பொதுமக்கள் யாரும் வரமுடியாத படி சாலையை துண்டித்து, சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணபதிபுரம் காலனி பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தும் சாலையை தங்களுக்கு மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும், உடனடியாக அந்த பள்ளத்தை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். “கோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளனர். என்னை வெற்றி பெற செய்த உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் போராட்டத்தை கைவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு பாதுகாப்பாக நான் இருப்பேன்”என்றார்.

அமைச்சர் பேசிவிட்டு சென்றதும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலையை துண்டித்து தோண்டப்பட்ட பள்ளத்தை மண்போட்டு மூட முயன்றனர். உடனே அங்கிருந்த சிலர், அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். எனவே யாரும் பள்ளத்தை மூடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளத்தை மூடாமல் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story