மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் கியூ.ஆர். குறியீடு காகித டிக்கெட்டுகள்


மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் கியூ.ஆர். குறியீடு காகித டிக்கெட்டுகள்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:05 AM GMT (Updated: 2021-10-27T12:35:07+05:30)

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் டோக்கன் டிக்கெட் முறையை மாற்றுவதற்காக, விமான நிலையங்களில் வழங்கப்படுவது போன்று மின்னணு கியூ.ஆர். குறியீடு காகித டிக்கெட்டுகள் விரைவில் வழங்கப்படுகிறது.

சென்னை,

சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணம் செய்பவர்கள் பயண அட்டை, மின்னணு கியூ.ஆர். குறியீடு மற்றும் டோக்கன் வகைகளில் டிக்கெட்டுகளை பெற்று பயணம் செய்கின்றனர்.

கியூ.ஆர். (விரைவான பதில்) குறியீடு டிக்கெட் என்பது ‘ஸ்மார்ட்’ மற்றும் ஆன்டிராய்டு செல்போன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் செயலியை (ஆப்பை) பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் முறையாகும். இதன் மூலம் ரெயில் நிலைய வாசலில் உள்ள ‘ரீடர்’ எந்திரத்தில் செல்போனில் உள்ள கியூ.ஆர். குறியீடை காண்பித்தால் எந்திரம் ‘ஸ்கேன்’ செய்துவிட்டு பயணிகள் விரைவாக செல்ல உதவுகிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் டிக்கெட் கவுண்ட்டர்களில் ‘ஸ்மார்ட்’ கார்டு அல்லது கியூ.ஆர். கோடு குறியீடு முறையில் டிக்கெட் பெற்றுக்கொள்ள பயணிகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி 3-ல் 1 பங்கு பயணிகள் இந்த வகையை பயன்படுத்தி வருகின்றனர். ‘ஸ்மார்ட்’ கார்டுகள் மற்றும் மின்னணு கியூ.ஆர். குறியீட்டு டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலான பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் டோக்கன்களை வாங்க விரும்புகிறார்கள். இது ஒருமுறை பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதில் பலர் டோக்கன்களை தவறவும் விட்டு விடுகின்றனர். பயணிகள் பயன்படுத்திய பின்னர் டோக்கன்கள் கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்படுகிறது. எனவே டோக்கன் டிக்கெட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், செல்போன் இல்லாதவர்களும் கியூ.ஆர். குறியீடு உடன் காகிதத்தில் ஆன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக விரைவில், விமான நிலையங்களில் உள்ள விமான நிறுவன கவுண்ட்டர்களில் கியூ.ஆர். குறியீடு உடன் அச்சிடப்பட்ட காகிதத்தில் ஆன போர்டிங் பாஸ் வழங்கப்படுவது போன்று, மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் எந்திரங்கள் அல்லது கவுண்ட்டர்களிலும் விரைவில் அச்சிடப்பட்ட கியூ.ஆர். குறியீடு டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் படிப்படியாக டோக்கன் டிக்கெட் முறைக்கு விடை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. காகிதத்தில் ஆன கியூ.ஆர். குறியீடு டிக்கெட்டுகளை பெற பயணிகள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் எந்திரங்களில் உள்ள அதற்கான பொத்தானை ‘கிளிக்’ செய்வதன் மூலம் தொற்றுநோய் பிடிக்கும் என்ற அச்சமின்றி கியூ.ஆர். குறியீடு அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கலாம்.

கியூ.ஆர். குறியீடு அச்சிடப்பட்ட காகித டிக்கெட்டை வாங்கும் பயணிகள், நடைமேடைகளுக்கு செல்வதற்கு வாசலில் உள்ள தானியங்கி கட்டண வசூல் எந்திரத்தில் டிக்கெட்டை வைக்க வேண்டும். பின்னர், பயணத்துக்கு பிறகு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற அதேபோன்று வாசலில் உள்ள தானியங்கி கட்டண வசூல் எந்திரத்தில் காகித டிக்கெட்டை வைக்க வேண்டும்.

இந்த முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகள் தற்போது வழங்கப்பட்ட டோக்கன்களை மாற்றுவதற்கான திட்டமாகும். கியூ.ஆர். குறியீடு அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளுக்கான சோதனைகள் நடந்து வருகிறது. பயணிகள் அவற்றை வாங்கக்கூடிய வகையில் 40 ரெயில் நிலையங்களிலும் விரைவில் அதற்கான எந்திரங்கள் நிறுவப்படும். ஏற்கனவே ரெயில் நிலைய வாசல்களில் தானியங்கி கட்டண வசூல் எந்திரங்களில் கியூ.ஆர். குறியீட்டு ‘ஸ்கேனர்’கள் உள்ளன.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்..

Next Story