பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குறைப்பு
பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. நீர்வரத்தை பொறுத்து பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு, குறைப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் நீர் வரத்து அதிகமானது.
அதாவது சராசரியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஒரு வார காலமாக ஏரியிலிருந்து 3, 13 எண் கொண்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது திருவள்ளூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர் வரத்து குறைந்தது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 576 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.86 அடியாக பதிவானது. 2.780 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 482 கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
மேலும் சோழவரம் ஏரிக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 50 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story