போடிமெட்டு மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்


போடிமெட்டு மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 27 Oct 2021 2:14 PM GMT (Updated: 2021-10-27T19:44:34+05:30)

போடிமெட்டு மலைப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

போடி:

போடியில் இருந்து போடிமெட்டு செல்லும் மலைப்பாதையில் உள்ளது மணப்பட்டி என்ற கிராமம். அங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

அந்த மலைப்பாதை வழியாக தான், போடிமெட்டு மற்றும் மணப்பட்டி கிராம மக்கள் மயானத்துக்கு சென்று வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடிக்கு சென்று உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். 

அதன்படி வருவாய் ஆய்வாளர் சண்முகம், கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி, தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர் சீதாராமன், வன அலுவலர் பெத்தனசாமி, குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் மணப்பட்டி கிராமத்துக்கு சென்றனர். 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், அந்த நபர் வாக்குவாதம் செய்தார். இருப்பினும், மயானத்துக்கு செல்லும் மலைப்பாதையில் இருந்த முள்வேலியை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். 7 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த நிலத்தை மீட்ட அதிகாரிகளை மலைக்கிராம மக்கள் பாராட்டினர்.
------

Next Story