விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 3:42 PM GMT (Updated: 2021-10-27T21:12:20+05:30)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வசந்தாமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர், மாவட்ட பொருளாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிலுவை இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் வேலை நாட்களை 200 ஆக அதிகரித்து, சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் பேரூராட்சி பகுதிகளுக்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story