முதல் திருமணத்தை கணவர் மறைத்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
முதல் திருமணத்தை கணவர் மறைத்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
2-வது திருமணம்
ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். ஆனந்தன் தனது முதல் திருமணத்தை மறைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் மகள் கவிதா (வயது 24) என்ற இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து கவிதா ஓசூரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கவிதாவுக்கு, ஆனந்தன் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
தற்கொலை
கடந்த 24-ந் தேதி ஆனந்தன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கவிதா அவருக்கு போன் செய்தபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை. மேலும் ஆனந்தன் தனது முதல் மனைவியான புஷ்பராணியுடன் ஓசூர் கிருஷ்ணாநகரில் உள்ள வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story