ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும்


ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:41 PM IST (Updated: 27 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலாளர்கள் விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும் என்று கடலூரில் நடந்த தொழில்நுட்ப பயிற்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.

கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளவனார் கலைக்கல்லூரியில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் தரவு மேலாண்மை மற்றும் கிராம ஸ்வராஜ் மூலம் பிற தகவல் தொழில்நுட்ப சேவைகள் குறித்த பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பயிற்சியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரவு-செலவு

இந்த பயிற்சி வகுப்பில் கிராம ஊராட்சியில் பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள், நிதி ஒதுக்கீடுகள், கிராம ஊராட்சி சொத்துக்கள் உருவாக்கம் மற்றும் பராமரித்தல், ஊராட்சியின் வரவு மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்களை இ-கிராம ஸ்வராஜ் போர்டல் மற்றும் பி.எப்.எம்.எஸ். இயங்கலை மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஊராட்சி செயலாளர்களின் பங்கு முக்கியமானது. ஊராட்சி மன்ற தலைவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து பணியாற்றுவீர்கள். ஆகவே விருப்பு, வெறுப்பின்றி நீங்கள் பணியாற்ற வேண்டும். குறிப்பாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் போன்றவற்றில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பதிவேற்றம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். முதல் தகவல் அளிப்பவர்களை சந்தித்து, அவர்களுடன் கூட்டம் நடத்த வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும். பயனாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். இங்கு நடக்கும் பயிற்சியை முடித்து விட்டு, நீங்களே தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.
683 ஊராட்சி செயலாளர்களுக்கும் சுழற்சி முறையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பயிற்சி நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார். இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், ஊராட்சிகள் துணை இயக்குனர் கண்ணண், கல்லூரி தாளாளர் பீட்டர் ராஜேந்திரம், கல்லூரி முதல்வர் அருமைசெல்வம், மாவட்ட வள மைய ஊராட்சிகள் தலைமை அலுவலர் கதிர்வேல் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story