24 மணி நேரமும் ஏரிகளை கண்காணிக்க வேண்டும். அதிகாரி உத்தரவு


24 மணி நேரமும் ஏரிகளை கண்காணிக்க வேண்டும். அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 27 Oct 2021 5:22 PM GMT (Updated: 2021-10-27T22:52:47+05:30)

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் 24 மணி நேரமும் ஏரிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

வேலூர்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் 24 மணி நேரமும் ஏரிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஸ்வர்ணா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகளை தடுக்க அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள், நிரம்பும் தருவாயில் உள்ள ஏரிகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்து மற்றும் வெளியேறும் நீர் தொடர்பாக அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 
ஏரிக்கரைகள் உறுதியாக உள்ளதா என்பதையும் பார்வையிட வேண்டும். நீர்நிலைகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகாதவாறு முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நிவாரண முகாம்கள்

வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 27 நிவாரண முகாம்கள் உள்ளது. அவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அங்கு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நிவாரண முகாம்களில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story