தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Oct 2021 6:21 PM GMT (Updated: 2021-10-27T23:51:11+05:30)

தினத்தந்தி புகார் பெட்டி

பள்ளிக்கூட கட்டிடம் சீரமைப்பு 
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் சந்திரப்பிள்ளைவலசு பஞ்சாயத்து பள்ளத்தாதனூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூட கட்டிடத்தின் உட்புறத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கடந்த 24-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த இடத்தில் மீண்டும் சிமெண்டு பூசும் பணி நடந்தது. பள்ளிக்கூட கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்த அதிகாரிகளுக்கும், நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-எம்.பழனிமுத்து, பள்ளத்தாதனூர், சேலம்.
உடைக்கப்படும் தடுப்புகளால் விபத்துகள்
கிருஷ்ணகிரியில் சென்னை மற்றும் பெங்களூரு சாலைகளில் சாலையின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. அதுவும் இருசக்கர வாகனங்களால் இந்த தடுப்புகள் சேதம் அடைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் சாலையின் நடுவில் உடைந்து கிடக்கும் தடுப்புகளை சீரமைக்க வேண்டும். 
-மணிமாறன், கிருஷ்ணகிரி.

நோய் பரவும் அபாயம்
சேலம் ஏற்காடு அடிவாரத்தில் 6-வது வார்டு சட்ட கல்லூரி அருகில் சின்ன கொல்லப்பட்டி  அய்யனாரப்பன் கோவில் பகுதியில் சாக்கடை  கால்வாய் பழுதடைந்து உள்ளது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாக்கடைநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும்.
-ஊர் மக்கள், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

சேலம் தாதகாப்பட்டி உழவர்சந்தை சண்முகநகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துவிட்டது. மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், தாதகாப்பட்டி, சேலம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுப்பிரமணியபுரம் 5-வார்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளில் இருந்தும் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயின் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
-எம்.விமலா, சுப்பிரமணியபுரம், நாமக்கல்.
===
சாலை நடுவே குடிநீர் குழாய்
சேலம் மாநகராட்சி 25-வது வார்டு பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் முன்புறம் மெயின் ரோட்டின் நடுவே குடிநீர் குழாய் உள்ளதால் அடிக்கடி  விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த குடிநீர் குழாயை ரோட்டின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும்.
-சித்தேஸ்வரன், பள்ளப்பட்டி, சேலம்.
===
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் தெரு தொடக்கத்தில் சாலை பழுதடைந்து உள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த பகுதியே குப்பை கிடங்கு போன்று காட்சி அளிக்கிறது. பழுதடைந்த சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. குப்பைகளை அள்ளவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.ஜெசீனா, ஓமலூர், சேலம்.
-===
ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் பணி
சேலம் ஜங்கஷன் தில்லைநகர் மெயின் ரோடு 5-வது குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாய் பணிக்காக சாலை தோண்டப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. ஆனால் பணிகள் நடைபெறாமல் அப்படியே உள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் வழி இல்லாமல் இருக்கிறோம். இந்த பணியால் குடிநீர் குழாய் உடைப்பு  ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயலட்சுமி, தில்லை நகர், சேலம்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பேரூராட்சி ஆண்டிபட்டி 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி தொடங்கி ஒரு ஆண்டு கிறது. பணியில் பாதியில் நிற்பதால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க ேவேண்டும்.
-ஊர்மக்கள், ஆண்டிபட்டி, சேலம்.
===
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி (படம் உண்டு)
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அத்திக்கட்டானூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது. இ்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காங்கிரீட் பெயர்ந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் அருகில் வீடுகளும், அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது. எனவே இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், அத்திக்கட்டானுர், சேலம்.


Next Story