பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலி எஸ்.வாழவந்தி அருகே சோகம்


பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட  பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலி எஸ்.வாழவந்தி அருகே சோகம்
x
தினத்தந்தி 27 Oct 2021 11:52 PM IST (Updated: 27 Oct 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலி எஸ்.வாழவந்தி அருகே சோகம்

பரமத்திவேலூர்:
எஸ்.வாழவந்தி அருேக பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி பலியானார். 
அறிவிப்பு பலகை இல்லை
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் இருந்து எஸ்.வாழவந்தி செல்லும் சாலையில் எம். ராசாம்பாளையம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே சிறிய பாலங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி எல்லப்பாளையம் அருகே சாலையின் குறுக்கே சுமார் 6 அடி பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 
பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பள்ளம் இருப்பதற்கான அறிவிப்பு பலகைகளோ, தடுப்புகளோ வைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்தில் மொபட்டில் இருந்து ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடந்ததை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எதிர்ப்பு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் விசாரணையில் இறந்தவர் எம்.ராசாம்பாளையம் அருகே எல்லப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (வயது 31) என்பது தெரியவந்தது. 
இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கைது நடவடிக்கை
இதற்கிடையே பாலம் அமைக்கும் ஒப்பந்ததாரர் பாலம் அமைக்கும் இடத்திற்கு அருகே பள்ளம் இருப்பதற்கான அறிவிப்பு பலகை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்புகள் அமைக்கப்படாததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

Next Story