சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உபகோவில்களில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களான பெரியசாமி மலைக்கோவிலில் கடந்த 7-ந் தேதி சுடுகளிமண்ணால் ஆன செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகளையும், செங்கமலையார் கோவிலில் உள்ள சுடுகளிமண்ணால் ஆன சுவாமி சிலைகளையும் மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
அதற்கு மறுநாள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் சாலையோரத்தில் குடிமக்கள் வழிபாட்டு தெய்வமான பெரியாண்டவர் கோவிலில் உள்ள கற்சிலைகளும், சிறுவாச்சூர் அம்மாள் நகரில் உள்ள சித்தர்கள் கோவிலில் சாமி சிலைகளும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி சித்தர்கள் கோவிலில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, சிதம்பரம் அருகே கால்நாட்டான்புலியூரை சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வந்தவருமான நடராஜன் என்கிற நாதனை (வயது 38) கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சிலைகள் உடைப்பு
இந்நிலையில் மீண்டும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களான பெரியசாமி மலைக்கோவில், செங்கமலையார் கோவில் மற்றும் பொன்னுச்சாமி கோவில், கொரப்புலியார் கோவிலின் சாமி சிலைகள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பெரியசாமி மலைக்கோவிலில் சுமார் 15 அடி உயரமுடைய கம்பீரமாக காட்சியளித்த பெரியசாமி சிலையும் முற்றிலும் உடைக்கப்பட்டிருந்தது. அதன் 3 குதிரை வாகனத்தில் ஒரு வாகனம் முற்றிலும் உடைக்கப்பட்டும், மற்றவை சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பூசாரி சிலை ஒன்றும் உடைக்கப்பட்டு, மற்ற சிலைகள் ஆங்காங்கே சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இதேபோல் அருகே உள்ள செங்கமலையார் கோவிலில் 15 அடி உயரமுடைய செங்கமலையார் சாமி சிலை முற்றிலும் உடைக்கப்பட்டிருந்தது. அதனருகே உள்ள பொன்னுசாமி கோவிலில் 4 சித்தர்கள் சிலைகள் முழுவதும் உடைக்கப்பட்டும், 2 சித்தர்களின் சிலைகள், ஒரு குதிரை வாகனம் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் அருகே உள்ள கொரப்புலியார் கோவிலில், கொரப்புலியான் சிலை முற்றிலும் உடைக்கப்பட்டும், அதன் 2 காளை வாகனங்கள், 3 வேட்டை நாய் வாகனங்களும் ேசதப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story