கழிவறையை திறக்கக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
கழிவறையை திறக்கக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது இலந்தைகூடம் கிராமம். இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பொது கழிவறை ஒன்று கட்டப்பட்டது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அந்த கழிவறை செயல்படாமலேயே இருந்து வருகிறது.
இதனால், வீட்டில் கழிவறை வசதி இல்லாத பெண்கள் திறந்த வெளியை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது கழிவறையின் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த இடத்தைத்தான் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பெண்கள் போராட்டம்
இதனால், இயற்கை உபாதையை கழிக்க எங்கு செல்வது என்று தவித்த பெண்கள் கழிவறையை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்ததோடு, நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவரை அனுகி முறையிட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவா்கள் நிருபர்களிடம் கூறுகையில், இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டபோது வசதி உள்ளவர்கள் அவரவர் வீட்டிலேயே கழிவறை அமைத்து கொள்ளலாம் என்கிறார். எங்களது வீட்டில் இடம் இருந்தால் தானே கழிவறை அமைக்க முடியும். தங்குவதற்கே இடமில்லாமல் தவித்து வரும் நிலையில் எங்கே எங்களால் கழிவறை கட்ட கொள்ள முடியும். மேலும், 100 நாள் வேலை கூட எங்களுக்கு ஊராட்சி சார்பில் வழங்கப்படுவதில்லை. பொது கழிப்பிடத்தை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு அதனை பராமரிக்க ஆட்கள் நியமிக்க வேண்டும். இல்லையென்றால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெண்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story