பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். அவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் போலீசாரிடம் சிக்காமல் 8 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் ஆவார்.
பெங்களூரு:
பிரபல ரவுடி
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் நிகில் (வயது 24). இவர், பிரபல ரவுடி ஆவார். நிகில் மீது 7 கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நிகிலின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அம்ருதஹள்ளி தவிர மற்ற போலீஸ் நிலையங்களிலும் நிகில் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடியை நிகில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்திருந்தார். இந்த வழக்கில் நிகிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டாா். அத்துடன் அம்ருதஹள்ளி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
போலீசார் மீது தாக்குதல்
அதே நேரத்தில் நிகில் தனது மீதான வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, நிகிலை கைது செய்ய அம்ருதஹள்ளி போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வெங்கடேஷ்வரா லே-அவுட்டில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நிகில் பதுங்கி இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் குருபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் ரவுடி நிகில் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ரவுடி நிகிலை பிடிக்க முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருந்த ஆயுதத்தால், பிரகாசை, நிகில் தாக்கினார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது.
ரவுடி சுட்டுப்பிடிப்பு
இதையடுத்து, வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டதுடன், சரண் அடைந்து விடும்படி ரவுடி நிகிலை, இன்ஸ்பெக்டர் குருபிரசாத் எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து விட்டார். மாறாக போலீசாரை மீண்டும் தாக்க முயன்றதுடன், தப்பி ஓடுவதற்கும் முயன்றார். உடனே நிகிலை நோக்கி இன்ஸ்பெக்டர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார். இதில், நிகிலின் காலில் குண்டு துளைத்தது. உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.
பின்னர் குண்டுகாயம் அடைந்த ரவுடி நிகில் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதுடன், கடந்த 8 மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த ரவுடி நிகில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story