கார்கே, பரமேஸ்வரின் கண்ணீர் அலையில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும் - நளின்குமார் கட்டீல்


கார்கே, பரமேஸ்வரின் கண்ணீர் அலையில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும் - நளின்குமார் கட்டீல்
x
தினத்தந்தி 28 Oct 2021 3:02 AM IST (Updated: 28 Oct 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தலித் ஒருவரை முதல்-மந்திரியாக்க காங்கிரசார் தயங்குகிறார்கள் என்றும், மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வரின் கண்ணீர் அலையில் காங்கிரஸ் அடித்துச் செல்லப்படும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.

பாகல்கோட்டை:

மல்லிகார்ஜுன கார்கே...

  பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நேற்று பாகல்கோட்டைக்கு வந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  காங்கிரசார், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் கண்ணீரில் பா.ஜனதா காணாமல் போய்விடும் என்று கூறி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இவ்வாறு பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே முதல்-மந்திரி இடத்தை பிடிக்க போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தலித் ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர வைக்க காங்கிரஸ் தயங்கி வருகிறது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் போன்றோர் முதல்-மந்திரி பதவி ஆக தகுதி படைத்திருந்தும் அவர்களை காங்கிரசாரும், டி.கே.சிவக்குமார், சித்தராமையா போன்றோரும் புறக்கணித்து வருகிறார்கள். அவர்களது கண்ணீர் அலையில் காங்கிரஸ் அடித்துச் செல்லப்படும். இது உறுதி.

உலக அளவில் சாதனை

  சிந்தகி, ஹனகல் தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் 2 ஆக உடைந்து விடும். சித்தராமையா தலைமையில் ஒரு அணியும், டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒரு அணியும் என காங்கிரஸ் 2 ஆக பிரிந்துவிடும். அக்கட்சி உடைவது உறுதி. சித்தராமையா முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் விடமாட்டார். அதேபோல் டி.கே.சிவக்குமார் தலைமையில் ஆட்சி அமைவதற்கு சித்தராமையாவும் விடமாட்டார். இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலைமை. இடைத்தேர்தல் நடைபெறும் ஹனகல் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டேன். இன்று(நேற்று) சிந்தகி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

  சிந்தகியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். 2 தொகுதிகளிலும் பா.ஜனதா அதிக ஓட்டுகள் எண்ணிக்கையில் வெற்றிபெறுவது உறுதி. கடந்த 7 வருடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் உலக அளவில் இந்தியா பல சாதனைகளையும், தனக்கென தனி இடத்தையும் பெற்று வருகிறது. கொரோனா பிரச்சினை சமயத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள், முடிவுகள், மக்கள் சேவைகள், வளர்ச்சி பணிகள், அவற்றை வேகமாக செயல்படுத்திய விதம், நாட்டைப் பற்றிய அவரது எதிர்கால சிந்தனை, மக்கள் மீது அவர் கொண்ட விசுவாசம் என பல விதங்கள் மக்கள் மனதில் மோடி நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறோம்.

கண்டிக்கத்தக்கது

  காங்கிரஸ் ஆட்சியில் அக்கட்சி தலைவர்கள் மக்களுக்கு வழங்கியது 4 அம்சங்கள் மட்டுமே. அது ஒன்று பயங்கரவாதம், இரண்டு ஊழல், மூன்று ஏழ்மை, நான்காவது வேலைவாய்ப்பின்மை. இவை நான்கையும் ஒழிக்க பா.ஜனதா அரும்பாடுபட்டு வருகிறது. அதனால்தான் மக்கள் 2-வது முறை பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர செய்தனர். பா.ஜனதாவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக காங்கிரசார் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story