3 மாதம் சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
3 மாதம் சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
3 மாதம் சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வேண்டும், முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் கோவிந்தன், பொருளாளர் குமார், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
காலமுறை ஊதியம்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் துப்புரவு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் வாரிசு வேலை உடனடியாக வழங்க வேண்டும். பேரூராட்சிகளில் 10 மற்றும் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கொங்கணாபுரம் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு பணி செய்த 7 தொழிலாளர்களை எவ்வித காரணமும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததால் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம், ஆத்தூர் நகராட்சிகளில் பிரதிமாதம் முதல் தேதியில் வழங்க வேண்டிய சம்பளம் 2 மாதம் ஆகியும் காலதாமதம் செய்து வழங்கப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story