சிங்கப்பூர் போலீஸ் என கூறி ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
சிங்கப்பூர் போலீஸ் என கூறி ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:-
சிங்கப்பூர் போலீஸ் என கூறி ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கப்பூரில் வேலை
தஞ்சை விளார் சாலையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது45). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர் அங்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தாயகம் திரும்பிய இவர் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல இயலவில்லை. இந்த நிலையில், இவரது வாட்ஸ் அப் எண்ணில் கடந்த 22-ந் தேதி வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், தான் சிங்கப்பூர் போலீஸ் துறையிலிருந்து பேசுவதாகவும், தாங்கள் கிரெடிட் கார்டில் பணம் போடப்படாமல் உள்ளது என்றும், பணத்தை உடனடியாக செலுத்துமாறும் பேசியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய முருகானந்தம் தனது மனைவி பெயரிலுள்ள வங்கிக்கணக்கு மற்றும் இணைக் கணக்கு விவரத்தையும், ஓ.டி.பி. எண்ணையும் கூறி உள்ளார்.
ரூ.2 லட்சம் மோசடி
இதைத்தொடர்ந்து, மனைவி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தையும், இணை கணக்கிலிருந்து ரூ.2 ஆயிரத்தையும் ஆன்லைன் மூலம் மர்ம நபர் அபகரித்துவிட்டார்.
இந்த தொகை கிரெடிட் கார்டிலும் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், இந்த மோசடி குறித்து தஞ்சை சைபர் குற்ற போலீஸ் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story