புனே அருகே, சிக்னல் வயரை துண்டித்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகளிடம் துணிகர கொள்ளை
புனே அருகே சிக்னல் வயரை துண்டித்து கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்திய கொள்ளையன் பெண் பயணிகளிடம் நகைளை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.
புனே, அக்.
புனே அருகே சிக்னல் வயரை துண்டித்து கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்திய கொள்ளையன் பெண் பயணிகளிடம் நகைளை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.
நடுவழியில் நின்ற ரெயில்
மும்பையில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் இரவு புனே அருகே டவுண்ட் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிக்னல் கோளாறு காரணமாக அந்த ரெயில் நடுவழியில் நின்றது. அப்போது ரெயிலில் இருந்த 2 பெண் பயணிகளிடம் கொள்ளையன் ஒருவன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணிகள் கூச்சல் போட்டனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் தங்கச்சங்கிலி பறித்த கொள்ளையனை பிடிக்க ரெயிலில் இருந்து இறங்கி விரட்டினார். அப்போது கொள்ளையன் அவர் மீது கல் வீசி தாக்கினான். இதில் அவர் காயத்தில் துடித்த நிலையில், அந்த கொள்ளையன் இருட்டில் ஓடிதப்பிவிட்டான்.
சிக்னல் வயர் துண்டிப்பு
இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சிக்னல் கோளாறு பற்றி திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சிக்னல் கேபிள் வயரை துண்டித்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி, இந்த துணிகர கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. எனவே இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்னலை கோளாறு செய்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி கொள்ளை நடந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story