கொரோனாவால் உயிரிழந்த போலீஸ்காரர்கள் நினைவாக மரக்கன்று; போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நட்டு வைத்தார்
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த போக்குவரத்து போலீசார் உருவப்படங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த போலீசாரின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த போலீசாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் சென்னை போலீஸ்துறை சார்பில் கடந்த 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வீரவணக்க வாரமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே வீரவணக்க வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த போக்குவரத்து போலீசார் உருவப்படங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த போலீசாரின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். அண்ணா ஆர்ச் முதல் அண்ணாநகர் போலீஸ்நிலையம் வரையில் போக்குவரத்து போலீசார் 100 பேர் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜெ.லோகநாதன், இணை கமிஷனர் எஸ்.லலிதா லட்சுமி, துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.தீபா கனிகர், எம்.எம்.அசோக்குமார், வி.கே.சுரேந்திரநாத் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story