சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் குண்டபாலம் என்ற கிராமத்துக்கு 2 பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சல்களில் வாழ்த்து அட்டை, ரெயில் மாதிரி பாகங்கள் என எழுதப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது 5 கிராம் எடை கொண்ட 10 பச்சை நிற போதைகள் மாத்திரைகள், 1 கிராம் ஆம்பெட்மைன் பவுடர், 7 கிராம் மெத் படிகம் இருந்தது. மற்றொரு பார்சலில் 118 கிராம் எடை கொண்ட 261 பிரவுன் நிற போதை மாத்திரைகள் இருந்தன. அதேபோல் அமெரிக்காவில் இருந்து ஆந்திராவுக்கு வந்த பரிசு பார்சலில் 132 கிராம் உயர்ரக கஞ்சாவும், ஸ்பெயின் நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு வந்த பார்சலில் 10 கிராம் உயர்ரக கஞ்சாவும் இருந்தது. மொத்தம் 4 பார்சல்களில் கடத்தி வரப்பட்ட 131 கிராம் போதை மாத்திரைகள், பவுடர், 142 கிராம் எடைகொண்ட கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார்சலில் குறிப்பிட்டு இருந்த ஆந்திர முகவரியில் விசாரித்தபோது அது போலி என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து யாருக்காக போதை மாத்திரைகள், கஞ்சா வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டது?. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story