உணவு டெலிவரி நிறுவன ஊழியர் குத்திக்கொலை
கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
அடித்துக்கொலை
சென்னை திரு.வி.க. நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மர்மநபர்கள், அவரை அடித்துக்கொலை செய்து இருப்பதாக தெரிந்தது. கொலையானவர் யார்? கொலையாளிகள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
உணவு டெலிவரி நிறுவன ஊழியர்
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலையானவர், பெரம்பலூர் மாவட்டம், நெய்க்குப்பம் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 37) என்பதும், மனைவியை பிரிந்து வாழும் அவர், தற்போது சென்னை பெரம்பூரில் நண்பர் சேகர் என்பவருடன் தங்கி, உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
இவர்களின் வீட்டுக்கு மேலும் சில நண்பர்கள் கஞ்சா அடிக்கவும், மது குடிக்கவும் அடிக்கடி வந்து சென்றனர். அதே வளாகத்தில் கீழ்தளத்தில் வசிக்கும் சகோதரர்களான ஜெமினி, இளவழகன் ஆகியோரின் வீட்டிலும் கஞ்சா, மதுபானம் அருந்தி வந்துள்ளனர்.
கஞ்சா புகைப்பதில் தகராறு
அப்போது கஞ்சா புகைப்பது தொடர்பாக மணிக்கும், கீழ்தளத்தில் வசிக்கும் சகோதரர்கள் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெமினி-இளவழகன் ஆகியோருக்கு ஆதரவாக ரஞ்சித்குமார் என்பவர் மணியிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த மணி, ரஞ்சித்குமாரை அடித்ததாக தெரிகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணியை சரமாரியாக அடித்து உதைத்தும், கத்தியால் தலையில் குத்தியும் கொன்றது தெரியவந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story