தூத்துக்குடி மாநகராட்சியில் வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை


தூத்துக்குடி மாநகராட்சியில்  வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்  மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2021 7:12 PM IST (Updated: 28 Oct 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்து உள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
30 சதவீதம்
தூத்துக்குடி மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதற்கு நித ஆதாரம் முக்கியமானது ஆகும். எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், உரிமையாணை கட்டணம், கடை வாடகை, தொழில் வரி மற்றும் இதர வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகையை உரிய காலத்துக்குள் மாநகராட்சி கணினி வரிவசூல் மையங்களில் செலுத்த வேண்டும். 
வரி மற்றும் வரியில்லா இனங்களின் மூலம் பெறப்பட வேண்டிய தொகைகள் இந்த ஆண்டு அக்டோபர் 2021 வரை 30 சதவீதம் தொகை மட்டுமே வசூலாகி உள்ளது.
குறைந்த அளவில்..
குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல்நகர், தபால் தந்தி காலனி, பாளையங்கோட்டை ரோடு மேற்கு, டூவிபுரம் 1,2-வது தெரு, சங்கர் காலனி, சுப்பையாபுரம் 1-வது தெரு, போல்டன்புரம் 1-வது தெரு மெயின், முனியசாமிபுரம் மேற்கு, பிரையண்ட்நகர் 12-வது தெரு, பண்டாரம்பட்டி, ராஜகோபால்நகர், ராஜீவ்நகர், மீளவிட்டான், போல்பேட்டை ஹவுசிங் போர்டு, கே.டி.சி.நகர், முத்தம்மாள் காலனி, போல்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் 6-வது தெரு, முத்துகிருஷ்ணாபுரம் 7-வது தெரு மெயின், பூபாலராயர்புரம், திரேஸ்புரம் பீச் ரோடு, தட்டார் தெரு, குரூஸ்புரம், நாராயணன் தெரு, மறக்குடி தெரு, சென்ட் பீட்டர் கோயில் தெரு, பிரமுத்து சந்து, தெற்கு காட்டன் ரோடு, மேலூர் பங்களா தெரு, குமாரர் தெரு, சிவந்தாகுளம் ரோடு, ரோச் காலனி, ஜார்ஜ் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் நிறுத்தம்
மேலும் மாநகராட்சிக்கு வர வேண்டிய தொகை பெருமளவில் நிலுவையாக இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை திட்டமிட முடியாத கடினமான சூழல் உருவாகி உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் போதுமான நிதி இருப்பில் இருப்பது அவசியம் ஆகும். இந்த நிலையில் மாநகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டதால் பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இதுபோன்ற குறைபாடுகளை களையும் விதமாக வரி மற்றும் வரி இல்லா இனங்களில் நிலுவை வைத்து உள்ள கட்டிடங்கள் மற்றும் மாநகராட்சியின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட, வரன்முறைப்படுத்தப்படாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதிக அளவில் வரிநிலுவை வைத்து உள்ள பகுதிகளுக்கன குடிநீர் சேவையை தற்காலிகமாக நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சியின் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story