கனகராஜ் அண்ணனை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி


கனகராஜ் அண்ணனை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
x
தினத்தந்தி 28 Oct 2021 7:22 PM IST (Updated: 28 Oct 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கைது செய்யப்பட்ட கனகராஜ் அண்ணன் தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கைது செய்யப்பட்ட கனகராஜ் அண்ணன் தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சயான், விபத்தில் இறந்த கனகராஜின்(ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சாட்சிகள் மற்றும் தேவைப்படுவோரிடம் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி பதிவு செய்யப்பட்டது. சம்பவத்துக்கு பின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த விபத்தில் இறந்தார். மேலும் கோடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

2 பேர் கைது

இந்த 2 மரணங்களும் யதார்த்தமாக நடந்ததா அல்லது கூட்டுச்சதியா என்பது குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர். அதில் முக்கிய தகவல்கள் பெறப்பட்டு, மின்னணு ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. தற்போது கனகராஜ் விபத்தில் இறந்த வழக்கு குறித்து மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் கோடநாடு வழக்கு தொடர்பான தொடர் விசாரணையில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், அவரது நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கடந்த 26-ந் தேதி தனபாலை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடலூர் கிளை சிறையில் இருந்து தனபாலை போலீசார் அழைத்து வந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

போலீசாருக்கு 5 நாள் அனுமதி

மனுவை விசாரித்த நீதிபதி, தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தும், அவரை வருகிற 1-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேருக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது. தனபாலை 5 நாள் காவலில் வைத்து, சோலூர்மட்டம் போலீசார் விசாரிக்க உள்ளனர். மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் கனகராஜின் செல்போன் எரித்து அழிக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த வழக்கு பரபரப்பான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story