ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 28 Oct 2021 9:15 PM IST (Updated: 28 Oct 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் சந்தையில், ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது

வடமதுரை: 

ஆட்டுச் சந்தை 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக இது திகழ்கிறது. 
திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று அய்யலூர் சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள் வந்து குவிந்தனர்.

 விவசாயிகள் கவலை
சந்தைக்குள் இடம் இல்லாததால், சந்தைக்கு வெளியே உள்ள சாலை வரை கூட்டம் அலைமோதியது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரத்து 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
 ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.250 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. நேற்று ஆடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் ஏராளமான விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை வீட்டுக்கே திரும்ப கொண்டு செல்லும் சூழ்நிலையும் ஏற்பட்டது. 

ரூ.2 கோடிக்கு விற்பனை
 இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தீபாவளியை முன்னிட்டு ஆடுகளின் வரத்து நேற்று அதிகம் இருந்தது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றனர். 
ஆடுகள் விற்பனை குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Next Story