கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 28 Oct 2021 10:12 PM IST (Updated: 28 Oct 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

சின்னமனூர்:


9-ம் வகுப்பு மாணவர்கள்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மகன் கவுதம் (வயது 13). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் லோகேஷ் பிரபு (13). 

இவர்கள் 2 பேரும், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 8 பேர்,  காமாட்சிபுரம் அருகே வேப்பம்பட்டியில் உள்ள அரசு கல்குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் குளித்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கவுதமும், லோகேஷ் பிரபுவும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 6 பேரும் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 

இதனையடுத்து கரைக்கு ஏறிய அவர்கள், ஊருக்கு சென்று 2 பேர் தண்ணீரில் மூழ்கிய தகவலை தெரிவித்தனர். இதேபோல் ஓடைப்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தண்ணீரில் மூழ்கி சாவு

அதன்பேரில் கிராம மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் கல்குவாரி குட்டையில் இறங்கி 2 பேரையும் தீயணைப்பு படையினர் தேடினர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு கவுதம், லோகேஷ் பிரபு ஆகியோரின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

 தண்ணீரில் மூழ்கி அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்றபோது, 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

அரசுக்கு சொந்தமான அந்த கல்குவாரி, கடந்த 20 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால் மழை பெய்யும்போது கல்குவாரி குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகி விட்டது. 

மேலும் இதுபோன்று உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story