அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த டிரைவர் சாவு
அருப்புக்கோட்டை அருகே அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் பாலாஜி (வயது 24). திருமணம் ஆகவில்லை. இவர் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் டிரைவராகவும், கிளீனராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு லாரியில் மணல் கொண்டு சென்றார்.
அப்போது லாரியில் கிளீனராக சென்ற பாலாஜி லாரிக்கு வழி காட்டுவதற்காக அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது கீழே அறுந்து கிடந்த மின்வயர் மீது எதிர்பாராதவிதமாக அவர் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story