தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி


தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 28 Oct 2021 10:32 PM IST (Updated: 28 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து உள்ளது. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தம் செய்து தயாராக வைக்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,581 பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்வதோடு, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படுகிறது.


இதற்கிடையே 1½ ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளிகளில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். அந்த கொசுக்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகளில் கொசுக்களை அழிக்க புகை மருந்து அடித்து தூய்மைப்படுத்தும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் புகை மருந்து அடிக்கும் பணி நேற்று தொடங்கியது.


Next Story