7-ம் கட்டமாக நாளை சிறப்பு முகாம்: 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
7-ம் கட்டமாக நாளை சிறப்பு முகாம்: 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 7-ம் கட்டமாக நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
750 முகாம்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 47 ஆயிரத்து 626 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 85 ஆயிரத்து 337 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 68.46 சதவீதம் பேரும், 2-ம் தவணையை 27.84 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள நபர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 6 மெகா தடுப்பூசி முகாம்களில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 523 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் 7-ம் கட்டமாக நாளை (சனிக்கிழமை) அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 750 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
1 லட்சம் தடுப்பூசிகள்
இந்த முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதல் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story