பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது


பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2021 11:12 PM IST (Updated: 28 Oct 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பறவைகளை துப்பாக்கி வைத்து வேட்டையாடிய அண்ணன், தம்பிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பறவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே பறவைகளை துப்பாக்கி வைத்து வேட்டையாடிய அண்ணன், தம்பிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பறவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பருவமழைக்கு முன்னதாக மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதுதவிர வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. இந்த வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகளை உண்பதற்காகவும், நீர்நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்டவைகளை தின் பதற்காகவும் ஏராளமான பறவைகள் சுற்றிவந்த வண்ணம் உள்ளன. 
இந்த பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய சில கும்பல் சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில நாட்களாக இரவு-பகலாக ரோந்து சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை ராமநாதபுரம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் ராஜசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சித்தார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிடிபட்டனர்
 ஊருக்கு வெளியில் சிலர் துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு அதிரடியாக சென்று பார்த்தபோது துப்பாக்கி வைத்து 3 பேர் பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை யிட்டபோது மாங்குயில், புள்ளிபுறா, சின்னான், குயில், கருஞ்சிவப்பு வால் ஈப்பிடிப்பான், அரசவால் ஈப்பிடிப்பான், செம்மார்பு குக்குருவன், தோட்டக்கள்ளன், நீலக்கொண்டை ஈப்பிடிப்பான், நீலமுக செண்பகம் ஆகிய 10 வகையான 23 பறவைகளை வேட்டையாடி வைத்திருந்தது தெரிந்தது. 
இந்த பறவைகளையும் அவர்கள் வேட்டையாட பயன் படுத்திய ஏர்கன் வகையை சேர்ந்த துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தார்கோட்டை பகுதியை சேர்ந்த சீனிமுகம்மது என்பவரின் மகன்களான முகம்மது இஸ்மாயில் (வயது40), அவரின் தம்பிகள் அப்துல்சத்தார் (35), புகாரி அஸ்மத் அலி (31) என்பது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
இவர்கள் பறவைகளை வேட்டையாட இந்த துப்பாக்கியை மதுரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததாகவும், இந்த துப்பாக்கியை வைத்து நீர்நிலை பகுதிகளில் உள்ள பறவைகளை வேட்டையாடியதாகவும், இறைச்சியை உண்பதற்காகவே வேட்டையாடியதாகவும் தெரிவித்தனர். 
அரசால் தடைசெய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடியதற்காகவும், அனுமதியின்றி துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம் பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story