ஜீப்பை திருடிய வடமாநில கும்பலை பிடிக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு


ஜீப்பை திருடிய வடமாநில கும்பலை பிடிக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 28 Oct 2021 11:19 PM IST (Updated: 28 Oct 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஜீப்பை திருடிய வடமாநில கும்பலை பிடிக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

ஓசூர், அக்.29-
ஜீப்பை திருடிய வட மாநில கும்பலை பிடிக்க சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர் அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஜீப் திருட்டு 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 28). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் சொந்தமாக ஜீப் வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு தனது ஜீப்பை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் ஜீப்பை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ராகேஷ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து பதிவிட்டு இருந்தார்.
துரத்தி சென்றனர் 
நேற்று முன்தினம் மாலை எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவிலுக்கு சென்றனர். அப்போது ஓசூர் தாண்டி தும்கூர் சாலையில் நெலமங்கலா பக்கமாக அவர்கள் சென்ற கார் சென்றபோது சாலையோரத்தில் ராகேசின் ஜீப் நிற்பதை பார்த்தனர். வாகனத்தின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் மாற்றி நிறுத்தி வைத்திருந்தை பார்த்த அவர்கள், அது ராகேஷ் ஜீப் என உறுதி செய்தனர். இதுகுறித்து ராகேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ராகேஷ், தனது உறவினர்கள் நந்தா கிஷோர், ஹரிநாத் உள்ளிட்டோருடன் நெலமங்கலா பகுதிக்கு சென்றார். அந்த நேரம் கொள்ளையர்கள் காரை தும்கூர் சாலையில் ஓட்டிச் சென்றனர். அவர்களை ராகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் துரத்தி பிடிக்க முயன்றனர். இதற்காக அவர்கள் ஜீப்பை பின் தொடர்ந்து சென்றனர்.
சுட்டுக் கொல்ல முயற்சி 
இதைப் பார்த்த ஜீப்பில் இருந்த கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ராகேஷ் தரப்பை நோக்கி சுட்டனர். துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு வெளியேறியது. அந்த குண்டு ராகேஷ் சென்ற வாகனம் மீது படவில்லை. மேலும் ராகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம் கொள்ளையர்களின் நடவடிக்கைகளை புகைப்படங்கள் எடுத்தனர்.கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் ராகேஷ் தரப்பினர் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் முடிவை கைவிட்டனர். பின்னர் கொள்ளையர்கள் நெலமங்கலா சுங்கச்சாவடியை இடித்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இது குறித்து ராகேஷ் பெங்களூரு நெலமங்கலா போலீசிலும் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை 
ஜீப்பை திருடிய நபர்கள் இந்தியில் பேசியவாறு ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த தகவல்களை வைத்து ஓசூர் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 
ஓசூர் அருகே ஜீப்பை திருடிய வட மாநில கொள்ளையர்கள், விரட்டி சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story