புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:58 PM IST (Updated: 28 Oct 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை வசதி வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஒன்றியத்தில் சிவவிடுதி காமாட்சி தெரு உள்ளது இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முறையான சாலை வசதி இல்லாததால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிவவிடுதி காமாட்சி தெருவில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், ஒரத்தநாடு.

சுகாதார சீர்கேடு 

தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஆர்.ஆர்.நகர் சாலையில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்.ஆர்.நகர் சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீர் வடிகாலில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-தமிழ்செல்வன், தஞ்சாவூர்.

சேறும், சகதியுமான சாலை 

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அன்னப்பன்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாதாக்கோட்டை தெருவில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகிறது. இதனால் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சேறும், சகதியுமாக உள்ள சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்.எனவே, பொதுமக்கள்நலன் கருதி மாதாக்கோட்டை தெருவில் புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களிள் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், அம்மாப்பேட்டை.

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியம் அன்னப்பன்பேட்டைபகுதியில் மாதா கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்கம்பம் பாதி சாய்ந்த நிலையில் உள்ளதால் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் மின்கம்பத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், அன்னப்பன்பேட்டை.

Next Story