ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி வேலை நிறுத்தம்
உடுமலை நகராட்சி பகுதியில் ஒப்பந்ததாரர் மூலம் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த மாத சம்பளத்தை வழங்கக்கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை
உடுமலை நகராட்சி பகுதியில் ஒப்பந்ததாரர் மூலம் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த மாத சம்பளத்தை வழங்கக்கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள்
உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகள், சுகாதார பணிகளுக்காக 5 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு டிவிசனிலும் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் துப்புரவுப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உடுமலை நகராட்சி சுகாதாரப்பிரிவில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 82 பேர் உள்ளனர். இதுதவிர ஒப்பந்ததாரர் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 216 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த துப்புரவுப்பணியாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரித்து வரும் பணிகளை செய்து வருகின்றனர். இதில் நிரந்தர துப்புரவுப்பணியாளர்களுக்கு நகராட்சி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
சம்பளம் நிலுவை
ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர் நகராட்சியில் இருந்து தொகையை பெற்று தனது நிறுவனத்தின் மூலம் சம்பளத்தொகையை வழங்குவது வழக்கம்.
இந்த நிலையில் ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவுப்பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான (செப்டம்பர்) சம்பளம் நேற்று காலை வரைவழங்கப்படவில்லை. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அக்டோபர் மாதமும் முடிய உள்ள நிலையில் இந்த துப்புரவுப்பணியாளர்கள் சம்பள நிலுவைத்தொகையை வழங்கும்படி கடந்த ஒருவாரத்திற்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் செப்டம்பர் மாதம் முடிந்து 28 நாட்களாகியும் சம்பளம் வராததால் நேற்று ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
இவர்கள் வழக்கமாக காலை 6 மணிக்கு பணிக்கு புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணிக்கு செல்லாமல் அந்தந்த சுகாதார டிவிசன் அலுவலகத்திற்கு முன்பு நின்றிருந்தனர். சிறிதுநேரம் கழித்து உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கும் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள் திரண்டிருந்ததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நகராட்சி ஆணையாளர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அந்த ஒப்பந்ததாரர் நிறுவனம் மூலம் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் அந்தந்த பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.இதற்கிடையில் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள், தீபாவளி செலவுகள் இருப்பதால் அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்னதாக வழங்கும்படி ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
பணிக்கு திரும்பினர்
இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பிற்பகலில் பணிக்கு சென்றனர். நகராட்சி நிரந்தர துப்புரவுப்பணியாளர்கள் காலை மற்றும் பிற்பகலில் வழக்கம்போல் பணிகளுக்குச்சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story