மழை வெள்ளத்தால் பாதித்த பகுதியை கலெக்டர் பார்வையிட்டார்
காரியாபட்டி அருகே மழை வெள்ளத்தால் பாதித்த பகுதியை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே மழை வெள்ளத்தால் பாதித்த பகுதியை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.
வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
காரியாபட்டி அருகே அரியனேந்தல் பகுதியில் நரிக்குறவர் காலனி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை வெள்ளம் அங்குள்ள குடிசை வீடுகளை சூழ்ந்தது.
இதை தொடர்ந்து அங்குள்ள மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு பாதுகாப்பாக மந்திரி ஓடைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கினார்கள்.
நேற்று அந்த மக்கள் தாங்கள் குடியிருந்த பகுதிக்கு சென்று தங்களது குடிசைகளை சீரமைத்தனர். .இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் காலனிக்கு சென்று பார்வையிட்டார்.
கான்கிரீட் வீடு கட்டி தர கோரிக்கை
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிக்கு வருவதற்கு சாலைவசதி இல்லை. எங்களுக்கு வீடு இல்லாததால் குடிசை போட்டு தான் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் குடிசை சேதம் அடைந்து விடுகிறது. எனவே கான்கிரீட் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, சத்திரம் புளியங்குளம் கால்வாயில் பாலம் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதன்பின்னர் அந்த பகுதி மக்களுக்கு தார்ப்பாய், போர்வை, அரிசி. காய்கறிகள், பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், திட்ட அலுவலர் திலகவதி, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், காரியாபட்டி மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சிவகுமார், சுரபி தொண்டு நிறுவன இயக்குனர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story