600 ஆண்டுகள் பழமையான அடுக்குநிலை நடுகல் கண்டெடுப்பு
பந்தல்குடியில் 600 ஆண்டுகள் பழமையான அடுக்கு நிலை நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டை,
பந்தல்குடியில் 600 ஆண்டுகள் பழமையான அடுக்கு நிலை நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் விஜயராகவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் எனது வரலாற்று மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது விஜயநகர காலத்தைச் சேர்ந்த கர்நாடக பாணியில் அமைந்த நான்கு அடுக்கு நிலை மற்றும் இரண்டு அடுக்கு நிலை நடுகல்லானது கண்டறியப்பட்டது. இந்த நான்கு அடுக்கு நிலை நடுகல்லானது 5 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது.
இந்த நடுகல் தூணின் இருபக்கங்களிலும் சிறிய சிற்பங்கள் உள்ளன. நான்கு அடுக்குகளில் அமைந்துள்ள நடுகல்லில் சிறிய அளவிலான புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நடுகல்லில் லிங்கத்தை வணங்கும் வீரர், குதிரை மீது அமர்ந்துள்ள இரு வீரர் சிற்பங்கள், இருபுறமும் இருமாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன், வீரர்கள் தங்கள் துணைவியரோடு இருக்கும் சிற்பங்கள், நான்கு பெண்களில் இருவர் சதி மேற்கொண்டனர் என்பதற்கு சான்றாக கையை மேலே உயர்த்திய நிலை சிற்பங்களாக காணப்படுகிறது. நடுகல்லின் மேற்பகுதி கூடு போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன், சந்திரன் உருவங்கள் உள்ளன. சூரியன், சந்திரன் உள்ளவரை அவர்களின் தியாகத்திற்கு சான்றாகவும் போற்றப்படும் நிலையில் இருக்கிறது என்பதை நமக்கு இயம்புகிறது.
600 ஆண்டுகள் பழமையானது
நான்கு அடுக்கு நிலை நடுகல்லை அடுத்து மற்றொரு நடுகல்லானது இரண்டு அடுக்கு நிலை நடுகல்லாக அமைந்துள்ளது. வீரன் பல்லக்கில் அமர்ந்த நிலையிலும், அதை இரண்டு பேர் சுமந்தவாறும் மேலே சிவலிங்கத்தை வீரன் வணங்கியவாறும் காணப்படுகிறது.
மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் நடந்த உட்பூசலின் போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் சதி மேற்கொண்ட வீரர்களின் துணைவியார்கள் நினைவைப் போற்றும் வகையில் இந்த நான்குநிலை நடுகல் அமைக்கப்பட்டு இருக்கலாம். தற்போது இந்த நடுகல்லை கோணப்பன் என்றும் கொண்டம்மன் என்ற பெயரிலும் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுக்கல் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story