276 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்


276 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Oct 2021 1:41 AM IST (Updated: 29 Oct 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் 276 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி:
தென்காசியில் 276 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலன், தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி, வேளாண்மை ஆகிய துறைகளின் சார்பில் 276 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 71 ஆயிரத்து 82 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருமுன் காக்க வேண்டும்

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்துடன் தென்காசி மாவட்டத்தையும் கவனிக்கும் பொறுப்பை முதலமைச்சர் எனக்கு வழங்கியுள்ளார். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்துங்கள். இன்று வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. பிரச்சினை வந்த பிறகு சரி செய்கிறேன் என்பதை முதலமைச்சர் விரும்பவில்லை. வருமுன் காக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்.
எனவே கடந்த ஆண்டு மழையினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுங்கள். தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுங்கள். சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரை எந்தவித சமரசமும் வேண்டாம். கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

குற்றாலத்தில் குளிக்க

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தென்பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அனைத்தும் சென்னை, கோவை போன்ற நகரங்களை சுற்றியே உள்ளன. முதலமைச்சர் எதிர்காலத்தில் தென்பகுதியில் தொழிற்சாலைகள் அமைய உரிய நடவடிக்கை எடுப்பார். முதலமைச்சரின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தனியார் தொழிற்சாலைகள் அமைக்க முன்வந்தால் அவர்களுக்கு என்ன வசதி செய்து கொடுக்க முடியுமோ அதை செய்வோம். விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதில் கால தாமதம் கூடாது. உடனடியாக வழங்க வேண்டும். இதற்காக அதனை பார்வையிட செல்லும் போது வருவாய் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து சென்று பாதிப்புகளை கவனித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். சுற்றுலா பயணிகள் ஒருபுறமிருந்தாலும் சுமார் 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைவில் முதலமைச்சரின் அனுமதி பெறுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, வல்லம் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், ஆலங்குளம் யூனியன் கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ், தி.மு.க. நகர செயலாளர் சாதிர், தென்காசி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம், தி.மு.க. விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story