டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களான சகோதரர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள்
உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா உப்புந்தா கிராமத்தை சேர்ந்தவர் யூ.பி.ஷெட்டி. இவரது சகோதரர் சீதாராம் ஷெட்டி. யூ.பி.ஷெட்டி அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுத்து வருகிறார். சீதாராமும் பல தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் தற்போது குடும்பத்துடன் தார்வாரில் வசித்து வருகின்றனர்.
அதாவது யூ.பி.ஷெட்டி தார்வார் டவுன் தாசனகுப்பா சர்க்கிளிலும், சீதாராம் தார்வார் டவுன் விநாயக் நகர் படாவனேயிலும் வசித்து வருகின்றனர். யூ.பி.ஷெட்டியும், சீதாராம் ஷெட்டியும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
சகோதரர்கள் வீடுகளில் சோதனை
இந்த நிலையில் யூ.பி.ஷெட்டியும், சீதாராம் ஷெட்டியும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று காலை யூ.பி.ஷெட்டியின் வீட்டிற்கு கோவாவில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சென்றனர். பின்னர் யூ.பி.ஷெட்டியின் வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் 10 கார்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட கோவாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விநாயக் நகர் படவானேயில் உள்ள சீதாராம் ஷெட்டியின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் சீதாராம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுபோல உடுப்பி மாவட்டம் உப்புந்தாவில் உள்ள யூ.பி.ஷெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் மங்களூரு, உடுப்பி, தார்வாரில் சகோதரர்கள் சொத்துகள் வாங்கி குவித்தது தெரிந்தது. இதற்காக சில ஆவணங்கையும் கைப்பற்றிய அதிகாரிகள் அதை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலை மனதில் வைத்து கொண்டே யூ.பி.ஷெட்டி, சீதாராம் ஷெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story