ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
நாகர்கோவிலில் கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 2 பெண்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 2 பெண்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரத போராட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்களாக 35 ஆண்டுகளுக்கு மேலாக பூதப்பாண்டியை சேர்ந்த பாப்பா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்களின் மாத சம்பளம் ரூ.110 ஆகும். இந்த நிலையில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் பண பலன்கள் வழங்கவில்லை என்றும், இது தொடர்பாக ஐகோர்ட்டு பண பலன்களை வழங்க உத்தரவிட்ட நிலையில் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மயங்கி விழுந்த பெண்கள்
இந்தநிலையில் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் 2 பெண்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மயங்கி விழுந்தவர்கள் மீது தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
இதற்கிடையே தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோரும் வந்திருந்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், கண்மணி ஆகியோர் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கும்படி கேட்டனர். தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட கல்வி அதிகாரி ரேணுகா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story