இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-மக்கள் தொகை இயக்குனர் தகவல்


இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-மக்கள் தொகை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2021 3:11 AM IST (Updated: 29 Oct 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குனர் தேவசேனாபதி தெரிவித்துள்ளார்.

சேலம்:
இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குனர் தேவசேனாபதி தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குனர் மற்றும் பிறப்பு இறப்பிற்கான இணை தலைமை பதிவாளர் தேவசேனாபதி தலைமையில் நடைபெற்றது. 
மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக துணை இயக்குனர் சின்னத்துரை, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) நெடுமாறன், துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) நளினி, பி.ஆர்.ஜெமினி, மாநகர் நல அலுவலர் யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குனர் தேவசேனாபதி பேசியதாவது:-
இணையதளத்தில் பதிவிறக்கம்
பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும். பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் வரை கட்டணமின்றி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 12 மாதத்திற்கு பின் 15 ஆண்டுகள் வரை தாமத கட்டணம் ரூ.200 செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். குழந்தையின் பெயரை பதிவு செய்திட பெற்றோர் மற்றும் காப்பாளரின் உறுதிமொழி கட்டாயமாகும்.
பெயர் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் தற்போது 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், உரிய கால தாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம். 1.1.2018- க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான சான்றிதழ்களை crstn.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கொரோனா இறப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறப்பை அறிய நிர்ணயக் குழு மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறக்க நேரிட்டால் அது கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்படும்.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனையில் உள்நோயாளியாக தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் 30 நாட்களுக்கு மேற்பட்ட இறப்புகளும் கொரோனா தொற்று இறப்பாக கருதப்படும். மேற்படி காரணங்களால் இறந்து, இறப்பின் காரணம் குறித்த சான்றிதழ் பெற இயலாத நிலையில் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்து குழுவின் பரிந்துரையின் பேரில் இறப்பின் காரணம் குறித்த அரசு ஆவணம் பெறலாம்.
இணையவழி மூலமாக...
1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு இறப்பு பதிவேடுகளை ரூ.75 லட்சம் செலவில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய பிறப்பு, இறப்பு பதிவேடுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் பொதுமக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்காக உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அலைய தேவையில்லை. இணையவழி மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story