அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 200 மாணவிகள் சேர்க்கப்படுவர்
நாகர்கோவிலில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 200 மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 200 மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பார்வையிட்டார்
நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் நேற்று மதியம் வந்தார். பின்னர் அவர் அங்குள்ள கட்டிடங்கள், வகுப்பறைகளை நேரில் சென்று பார்வையிட்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைதொடர்ந்து அமைச்சர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆய்வு
தமிழகத்தில் உள்ள 90 அரசின் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்து, அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு என்பதை உருவாக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் தொழற்சாலைகள் உள்ளன. எந்ெதந்த தொழிற்சாலைகளில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தகுந்த பாடங்களை தேர்வு செய்து படிக்கவும், புதிய பாடப்பிரிவுகளை கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூடுதல் மாணவிகள்
திறன் மேம்பாட்டு துறை அமைக்கப்பட்டதின் நோக்கம் பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்கள் 70 சதவீதம் பயிற்சியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே ஆகும். நாகர்கோவில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 256 பேர் படித்து வருகின்றனர். இங்கு அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக புதிய பாடப்பிரிவுகளை கொண்டு வந்து 200 மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கையான முத்தரப்பு குழுக்கள் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தில் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் உள்ளது. இதில் சுமார் 30 லட்சம் உறுப்பினா்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 10 ஆண்டு காலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களில் 50 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். தற்போது வரை 37 ஆயிரத்து 502 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் நிலுவையில் உள்ளது. அவர்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்ததும் நலத்திட்ட உதவிகள் ஒரே நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாட அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
கல்லூரிக்கு வந்த அமைச்சர் கணேசனிடம், முதல்வர் பிரமிளா கோரிக்கை மனு கொடுத்தார்.
அமைச்சருக்கு வரவேற்பு
முன்னதாக நாகா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வந்த அமைச்சர் கணேசனுக்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், பெர்னார்டு, மாவட்ட பொருளாளர் கேட்சன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியன், ஒன்றிய செயலாளர் மதியழகன், அணி அமைப்பாளர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு சான்றிதழ்
இதனை தொடர்ந்து கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கணேசன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும் தேர்வுக்கான பயிற்சி கையேடுகள், வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவி தொகைக்கான ஆணை மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தரவு நுழைவு இயக்குபவருக்கான பணி ஆணையையும் அவர் வழங்கினார்.
Related Tags :
Next Story