வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஊத்துக்கோட்டை,
வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள திருக்கண்டலம் தடுப்பணை மற்றும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் என்.சுப்பையன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு உத்தரவுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பெரிய சேதம் ஏதுவும் நிகழாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பாக என்னென்ன முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், செய்யக்கூடிய பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் பேரிடர் மேலாண்மை குழு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளது.
இந்த குழு பல்வேறு துறை அலுவலர்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயல்பாடுகள் குறித்து களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாக ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகள் பாயும் வழித்தடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 8 இடங்கள் மட்டும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து கரையோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் 91 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. அதேபோன்று 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சவுக்கு மர கட்டைகள், மின்கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வார காலமாக மழைநீர் வடிகால் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளும் ஜெனரேட்டர் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் அதன் முழு கொள்ளளவில் 80 சதவிகிதம் நிறைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் விரைவாக முழு கொள்ளளவை எட்டி விடும் நிலையில் உள்ளன. எனவே நீர்த்தேக்கங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து உடைப்பு ஏற்படாமலிருக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கலாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் 1970, 1977 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story