தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பள்ளிக்கூட வாகனங்கள் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதா என்று அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிக்கூட வாகனங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிக்கூட வாகனங்கள் நீண்டநாட்களாக இயக்கப்படாமல், தற்போது இயக்கப்பட உள்ளன. இதனால் அந்த வாகனங்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளதா என்று வருவாய்த்துறை, போலீஸ் துறை, வட்டார போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினரால் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வு
அதன்படி தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கூட வாகனங்கள் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட்டன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடியில் 157 பள்ளிக்கூட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதில் கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ். கருவி, அவசர கால ஜன்னல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதா? தீயணைப்பு கருவி, வாகனங்களில் தரைப்பகுதி தரமாக உள்ளதா? படிக்கட்டுகள் தரமாக உள்ளதா? குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் மொத்தம் 87 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கண்காணிப்பு கேமிரா, ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தாத வாகனங்கள் மற்றும் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 21 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.
கலெக்டர் செந்தில்ராஜ் பார்வை
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார். அவர் பஸ்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, வருகிற 1-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இதனால் பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வடகிழக்கு பருவமழையில் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்களை பள்ளி வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அனைத்து பள்ளி வாகனங்களும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்படும். ஆய்வு அடிப்படையில் பொது சாலையில் இயக்க தகுதிவாய்ந்த பள்ளி வாகனங்கள் மட்டுமே பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story