தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு போலீஸ்துறை சார்பில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு கேமராபொருத்திய வாகன ரோந்துக்கும் ஏற்பாடு


தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு போலீஸ்துறை சார்பில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு கேமராபொருத்திய வாகன ரோந்துக்கும் ஏற்பாடு
x
தினத்தந்தி 29 Oct 2021 6:51 PM IST (Updated: 29 Oct 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு போலீஸ்துறை சார்பில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், கண்காணிப்பு கேமராபொருத்திய வாகன ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு போலீஸ்துறை சார்பில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், கண்காணிப்பு கேமராபொருத்திய வாகன ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கோபுரம்
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிப்பதற்காக 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நான்கு புறமும், அதாவது 360 டிகிரியில் கண்காணிக்கக்கூடிய கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலமும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கோபுரம் மற்றும் கண்காணிப்பு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காணிப்பு வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நடவடிக்கை
அப்போது, தூத்துக்குடி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைதெருவில் அதிக கூட்டங்கள் கூடுவதால், பொதுமக்களின் நலன் கருதி குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் 360 டிகிரியில் நான்கு திசைகளிலும் கண்காணிக்கக்கூடிய அளவில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த வாகனத்தில் போலீஸ் ஒருவர் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். இந்த வாகனம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
1500 போலீசார்
கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் தங்கசங்கிலி பறிப்பு, உடைமைகள் திருடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது தங்களது உடமைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த ஒரு வார காலத்திற்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story