சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி திடீர் ஆய்வு
குன்னூர் ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர்
குன்னூர் ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மலைரெயில் ரத்து
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்
பருவமழைக்காலங்களில் மலைரெயில் பாதையில் மண்சரிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் சாய்ந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
சமீபத்தில் பெய்த பலத்த மழையால் நிகழ்ந்த அதுபோன்ற சம்பவங்களால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் கவுதம் சீனிவாசராவ் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் குன்னூருக்கு திடீரென வந்தார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்தனர்.
திடீர் ஆய்வு
அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு வந்த பொது மேலாளர் கவுதம் சீனிவாசராவ், அங்குள்ள அறைகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
கட்டணத்தை குறைக்க முடியாது
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள மலைரெயில் பாதையில் பலத்த மழை காரணமாக பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வை நிரந்தரமாக தடுக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதியே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், காலநிலை மோசமாக உள்ளது. இதனால் மலைரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயிலை இயக்க முடிவு செய்யவில்லை. உயர்த்தப்பட்ட மலைரெயில் கட்டணத்தை இந்த ஆண்டு குறைக்க முடியாது. அடுத்த ஆண்டு குறைக்க பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story