சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீரை திறந்த கேரள மந்திரிகள்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள மந்திரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தேனி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள மந்திரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, கடந்த மாதம் 130 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி 138.5 அடியாக உயர்ந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
இதற்கிடையே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான் வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது இருமாநில தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நேற்று முன்தினம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில், "முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்பு குழு பரிந்துரைத்துள்ள 139.50 அடி வரையிலான தண்ணீரை நவம்பர் 11-ந்தேதி வரை தேக்கி வைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கேரள மந்திரி
ஆனால், இந்த உத்தரவு வருவதற்கு முன்பே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களிடம் 29-ந்தேதி (நேற்று) காலை 7 மணிக்கு தண்ணீர் திறக்கப்போவதாகவும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினமே அணையில் இருந்து 29-ந்தேதி காலை 7 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற கருத்தை பதிவிட்டார். அப்போது அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக தான் இருந்தது. மேலும் நேற்று முன்தினம் அணையை பார்வையிட்ட மந்திரி ரோஷி அகஸ்டின் ஏற்கனவே அறிவித்தபடி காலை 7 மணிக்கு உபரிநீர் திறக்கப்படும் என்றார்.
தண்ணீர் திறப்பு
அதன்படி, நேற்று காலை 6.30 மணிக்கு கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின், வருவாய்த்துறை மந்திரி ராஜு, இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாழுர் சோமன் மற்றும் சிலர் தேக்கடியில் இருந்து வனத்துறையின் விரைவு படகு மூலம் அணையின் மதகு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதேபோல் அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை 6.40 மணியளவில் தேக்கடியில் இருந்து படகில் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேரள மந்திரிகள் முன்னிலையில் அணையில் இருந்து காலை 7.29 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக இருந்தது.
அணையில் மொத்தம் 13 மதகுகள் உள்ளன. இதில் 3 மற்றும் 4-வது மதகுகள் 35 செ.மீ. அளவுக்கு திறக்கப்பட்டு, ஒவ்வொரு மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 267 கன அடி வீதம் மொத்தம் 534 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே வண்டிப்பெரியார், வல்லக்கடவு முல்லைப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டபோது அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 194 கன அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 2 ஆயிரத்து 344 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது.
தமிழக உரிமை பறிபோனது
இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக இருந்தால் தமிழக அமைச்சர்கள், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் தேக்கடிக்கு சென்று தண்ணீர் திறப்பது தான் மரபாக இருந்தது. உபரிநீர் வெளியேற்றும் சூழல் ஏற்பட்டால் அது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளே மதகுகளை இயக்குவதும் மரபாக இருந்தது. ஆனால், அணை வரலாற்றில் முதல் முறையாக தண்ணீர் திறப்பு குறித்து முன்கூட்டியே கேரள அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டு, கேரள மந்திரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்ட சம்பவம் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் நவம்பர் 11-ந்தேதி வரை 139.50 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், நீர்மட்டம் 139 அடியை எட்டும் முன்பே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமை பறிபோய் விட்டதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
999 ஆண்டு ஒப்பந்த நாளில்...
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று (அக்டோபர் 29-ந்தேதி) கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி சென்றது. முல்லைப்பெரியாறு அணை வரலாற்றில் அக்டோபர் 29-ந்தேதி என்பது மிகச்சிறப்பு வாய்ந்த நாள். 1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி தான் ஆங்கிலேய அரசுக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே முல்லைப்பெரியாறு அணை செயல்திட்டத்தின் 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும், ஆங்கிலேய அரசுக்கும் இடையே நடந்த முயற்சிகளுக்கு பிறகு இந்த குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசுக்கு நிலவரி செலுத்தி வருகிறது. இந்த சிறப்பு மிக்க நாளான நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story