அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2021 9:07 PM IST (Updated: 29 Oct 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் தூர்வார வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் தூர்வார வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

அப்போது அவர்கள் கூறியதாவது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கம் வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஊராட்சி சாலைகளிலும் ஏரி மற்றும் பாசன கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாட்டுக் கொட்டகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். வருவாய் துறையின் மூலம் யு.டி.ஆர். பட்டா மாறுதல் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை குறித்து பேசினர். 

மேலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகவும் வழங்கினர். மேலும் கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்த கையேடு கலெக்டர் வெளியிட்டார்.

அதிகாரிகள்

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவிதேஜா, கூட்டுறவு துணை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, அனைத்து அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story